Saturday 14 December 2019

சங்கம் மீட்போம்


அன்பார்ந்த தில்லித் தமிழ்ச் சங்க உறுப்பினர்களே,
வணக்கம்.

நாளை நடைபெற இருக்கும் தேர்தலில், சங்கம் மீட்போம் என்னும் அணியில் நான் பொதுச் செயலர் பொறுப்புக்குப் போட்டியிடுகிறேன். என் பெயர் ஷாஜஹான். 1991இல் சங்கத்தில் உறுப்பினராக சேர்ந்தேன். அன்று முதல் சில காலம் பொறுப்பில் இருந்தபோதும், எந்தப் பொறுப்புகளிலும் இல்லாதபோதும் சங்கத்துக்கு என்னால் இயன்ற பணிகளை செய்து வந்திருக்கிறேன் என்பதை உங்களில் பலர் அறிந்திருப்பீர்கள்.
உங்கள் ஒவ்வொருவரையும் சந்தித்து, சங்கம் குறித்த என் பார்வைகளை உங்கள் முன்வைக்க விரும்பினேன். ஆனால் கால அவகாசம் இன்மையால் இயலாமல் போனது.
இன்று சங்கத்தின் முன்னே இருக்கும் சவால்கள் என்ன, உறுப்பினர்கள் சேர்க்கை நிறுத்தப்பட்டு விட்டதால் ஏற்படக்கூடிய சிக்கல்கள் என்ன, எமது அணியின் கொள்கைகள் என்ன, செயல் திட்டம் என்ன ஆகிய விவரங்களை எமது அறிக்கைகளின் மூலம் பார்த்திருப்பீர்கள். அல்லது reform-sangam.blogspot.com என்ற வலைதளத்தில் நீங்கள் விரிவாகப் பார்க்கலாம். எமது அணியினரைப் பற்றிய விவரக் குறிப்புகளையும் அதில் பார்க்கலாம்.
சங்கத்தில் தேர்தல் நடைபெறும்போதெல்லாம் ஒரு விஷயத்தை நீங்கள் கவனித்திருப்பீர்கள். குறிப்பிட்ட சிலரே திரும்பத் திரும்ப பதவிக்கு வந்து கொண்டிருப்பார்கள். சங்க விதிகளின்படி, ஒருமுறை பதவியில் இருந்தவர்கள் அடுத்த தேர்தலில் போட்டியிட முடியாது. அந்த விதியும் இல்லை என்றால், ஆயுளுக்கும் சிலரே நாற்காலிகளைப் பிடித்துக் கொண்டிருப்பார்கள்.
இவ்வாறு சிலர் மட்டுமே திரும்பத் திரும்ப பதவிகளில் வரும்போது, புதியவர்களுக்கு, அவர்களின் புதிய சிந்தனைகளுக்கு, புதிய முயற்சிகளுக்கு வாய்ப்பு இருக்காது. வெறும் பொழுதுபோக்குச் சங்கமாக ஆகி விடும். ஆகிவிட்டது என்றே சொல்ல வேண்டும்.
சொந்தக் கட்டிடமும் நல்ல வருவாயும் உள்ள சங்கம் தமிழின் வளர்ச்சிக்கு, தமிழை பரப்புவதற்கு, படைப்பாளிகளுக்கு, தில்லித் தமிழ் மாணவர்களுக்கு, தமிழாய்ந்த சான்றோர்களுக்கு, கலைஞர்களுக்கு என எவ்வளவோ செய்ய முடியும். ஆனால் இங்கே நடப்பதெல்லாம் முற்றிலும் வேறு. உதாரணமாக, சங்கத்தின் வலைதளத்தின் தரத்தையே நீங்கள் பார்த்துக்கொள்ளலாம். எழுபதாண்டுகள் பழைமையான சங்கத்தின் வலைதளம் என்ன நிலைமையில் இருக்கிறது பார்த்தீர்களா? எந்த உலாவியில் சங்க வலைதளத்தில் நுழைந்தாலும், வைரஸ் இருக்கக்கூடும், சாக்கிரதை என்ற எச்சரிக்கை வருகிறது.
ஆக்கபூர்வமான நிகழ்ச்சிகள் என்பதைக் கண்டு பல காலமாகி விட்டது. பாரதி விழாவும், திருவள்ளுவர் விழாவும் நிறுத்தப்பட்டு விட்டன. தமிழ்ப் பள்ளிகளில் முதலிடம் பெற்றுத் தேர்ச்சி பெறும் மாணவர்களுக்குப் பரிசுகள் தருவதற்கென பத்துலட்சம் ரூபாய் மதிப்புள்ள அறக்கட்டளை உண்டு. ஆனால் பரிசுகள் தரப்படுவது நிறுத்தப்பட்டுவிட்டது. திருப்பனந்தாள் ஆதீனம் போன்ற அறக்கட்டளை சொற்பொழிவுகள் நிறுத்தப்பட்டு விட்டன. நூல் வெளியீடுகள் இல்லை. இலக்கிய விழாக்கள் இல்லை.
அடுத்த முக்கியப் பிரச்சினை நிர்வாகம். மைய அரசுத் துறை ஒன்று, சங்கத்தின் மீது நாலரை கோடி ரூபாய் தண்டத் தொகை விதித்தது. அதில் ஒரு கோடி ரூபாய் செலுத்தி விட்டு, மீதியைக் குறைக்க முயற்சிகள் நடைபெற்று வருவதாக சொல்லப்பட்டது. ஆனால் நடந்தது என்ன? நான்கு கோடியாக இருந்த்து இப்போது 13.5 கோடி தண்டத்தொகையாக உயர்த்தப்பட்டு விட்டது. அந்தப் பிரச்சினையை சரி செய்ய வேண்டும் என்பதற்காகத்தான் திரு ரெங்கநாதன் அவர்களை தலைவர் வேட்பாளராக தேர்வு செய்தோம் என்பதையும் சுட்டிக்காட்ட வேண்டும்.
சரி, தண்டத் தொகை நான்கு கோடியிலிருந்து மூன்று மடங்கு அதிகமானதற்கு யார் காரணம்? யார் பொறுப்பு? இந்தக் கேள்விகளுக்கெல்லாம் சரியான பதிலே கிடைக்காது. ஏன்?
ஏனென்றால்,
சங்க நிர்வாகத்தில் வெளிப்படைத் தன்மை இல்லை.
ஜனநாயக மாண்புகள் இல்லை.
உறுப்பினர்களின் கருத்துக்கு மதிப்பு இல்லை
பதிலளிக்கும் பொறுப்புடைமை இல்லை.
நிதி நிர்வாகத்தில் விதிகள் போதவில்லை, இருக்கிற விதிகளும் பின்பற்றப்படுவதில்லை.
எனவேதான், சங்கத்தின் நிர்வாகம், நிதி நிர்வாகம் ஆகியவற்றை முறைப்படுத்துவதற்காக சில துணைவிதிகள் உருவாக்க வேண்டும் என்று பல ஆண்டுகளாக நாங்கள் கோரி வருகிறோம். அவற்றுக்கான வரைவுகளை உருவாக்கி அளித்தும் இருக்கிறோம்.
ஆனால் நண்பர்களே,
மிகவும் வருத்தம் தரும் செய்தி என்னவென்றால், கடந்த பத்துப் பன்னிரெண்டு ஆண்டுகளில் சங்கத்தில் பொறுப்புகளில் வந்த எவரும், இந்த துணைவிதிகள் கூடாது என்று தேர்தல் நேரத்தில் சொன்னதே இல்லை. இன்னும் சரியாகச் சொன்னால், துணைவிதிகளை உருவாக்குவோம், ஜனநாயகத்தை நிலைநாட்டுவோம் என்று சொல்லியே எல்லாருமே பதவிகளைப் பிடித்தார்கள். ஆனால் பதவிக்கு வந்ததும் அதை முற்றிலும் மறந்து விடுவது மட்டுமல்ல, அதற்கு எதிரான நிலைபாடுகளே எடுத்தார்கள்.
இதுவே தொடர்கதையாக நடந்து கொண்டிருப்பதைக் கண்டு பொறுக்க முடியாமல்தான், சங்கம் மீட்போம் அணி உருவானது.
சங்கம் மீட்போம் அணியைச் சேர்ந்த நாங்கள் கீழ்க்கண்ட வாக்குறுதிகளுடன் தேர்தலில் போட்டியிடுகிறோம்.
செயல்பாடுகள் அனைத்திலும் ஒளிவு மறைவு இல்லாமல் வெளிப்படையாக இருப்போம்.
செயற்குழுவின் தீர்மானங்கள், வரவு செலவுக் கணக்குகள் முதலியவற்றை மாதந்தோறும் வலைதளத்தில் பதிவேற்றுவோம்.
உறுப்பினர்களின் கருத்துகளுக்கு மதிப்பளிப்போம்.
உறுப்பினர்களில் பல துறைகளிலும் தகுதி வாய்ந்தவர்களைக் கொண்டு ஆலோசனைக் குழுக்களை அமைத்து, அவர்களின் கருத்தறிந்து செயல்படுவோம்.
பணிவும் துணிவும் பதவியில் இருப்போருக்கு இரு கண்கள் என்பதை உணர்ந்து செயல்படுவோம்.
தில்லித் தமிழ் மாணவர்களுக்காக ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வந்த பாரதி விழாப் போட்டிகள், திருக்குறள் போட்டிகள் ஆகியவற்றை மீண்டும் நடத்துவோம்.
தமிழ்ப் பள்ளிகளில் முதலிடம் பெறும் மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த பரிசுகள் மீண்டும் வழங்கப்படும்.
வலைதளம் சீரமைக்கப்படும். நூலகத்தில் உள்ள நூல்களின் பட்டியல் வலைதளத்தில் பதிவேற்றப்படும்.
புதிய உறுப்பினர்களை சேர்ப்பதே இல்லை. உறுப்பினர் சேர்க்கை முறைப்படுத்தப்பட்டு, புதியவர்கள் உறுப்பினர் ஆக்கப்படுவார்கள்.
தமிழர்கள் திரளாக இருக்கும் பகுதிகளில் கிளை நூலகங்களை உருவாக்க முயற்சிகள் மேற்கொள்வோம்.
பதவிக்காலம் முடிந்த பிறகும் நாற்காலியைப் பிடித்துத் தொங்கிக் கொண்டிருக்க மாட்டோம்.
இதே போன்ற வாக்குறுதிகளை மற்றவர்களும் முன்வைக்கலாம். ஆனால் எங்கள் அணிக்கும் மற்றவர்களுக்கும் ஒரு முக்கியமான வித்தியாசம் உண்டு.
எங்கள் அணியினரில் என்னைத் தவிர எவரும் சங்கத்தில் பொறுப்பு வகித்தவர்கள் அல்ல. நானும்கூட இருபது ஆண்டுகளுக்கு முன்புதான் பொறுப்பில் இருந்திருக்கிறேன்.
மற்ற அணிகளைப் பொறுத்தவரையில், அவர்கள் எல்லாருமே இதே வாக்குறுதிகளை முன்வைத்துத்தான் தேர்தலில் வென்றார்கள், பதவிகளை அனுபவித்தார்கள். பதவிகளில் இருந்தபோது இவற்றை நிறைவேற்ற எந்த முயற்சியும் செய்யாமல் காலத்தைக் கழித்தார்கள். இப்போது மீண்டும் அதே வாக்குறுதிகளை முன்வைக்கிறார்கள். ஆமாம், சொன்ன சொல் மாற மாட்டார்கள். இப்போதும் அவர்களுக்கே வாக்களித்தால், அடுத்த முறையும் இதே வாக்குறுதிகளை முன்வைப்பார்கள்.
உங்களுக்கு வாக்குறுதிகள் மட்டும் வேண்டுமா இல்லை அவற்றை செயல்படுத்தவும் வேண்டுமா? நீங்களே முடிவு செய்யுங்கள்.
சங்கம் பெருமைமிகு சங்கமாக மீண்டும் பொலிவு பெற வேண்டுமானால், சங்கம் மீட்போம் அணிக்கு வாக்களித்து வெற்றி பெறச் செய்யுங்கள்.
எங்கள் அணியில் 17 பேர் இல்லை, பத்துப் பேர்தான் இருக்கிறோம். ஆனால் பத்தும் முத்துகள் என்பதை உறுதியாகச் சொல்ல முடியும். மற்ற இரண்டு அணிகளிலும் தகுதி வாய்ந்த சிலர் இருக்கவே செய்கிறார்கள். மீதமிருக்கும் ஏழு இடங்களுக்கு, அவர்களில் யார் கல்வி-கேள்வியில் சிறந்தவர்கள், யார் சங்க நலனில் அக்கறை கொண்டவர்கள், யார் தன்னை முன்னிறுத்திக் கொள்ளாதவர்கள் என்று நீங்கள் கருதுகிறீர்களோ அவர்களுக்கு வாக்களியுங்கள்.
பாதை தவறிய சங்கத்தை மீட்டு சீரமைக்க உங்கள் கடமையை நிறைவேற்றுங்கள்.
அணியின் வேட்பாளர்கள் பற்றிய தகவல்களை, செயல் திட்டங்களை, சங்கம் எதிர்கொண்டிருக்கும் சிக்கல்களை, எங்கள் கொள்கைகளை அறிய தயவு செய்து வலைப்பூவில் பாருங்கள்.
சங்கம் மீட்போம் அணிக்கு வெற்றி தேடித் தாருங்கள்.
நன்றி. வணக்கம்.


Friday 13 December 2019

சங்கத்தின் முன் உள்ள சவால்கள்


தில்லித் தமிழ்ச் சங்கம்

எழுபது ஆண்டுகள் பழைமையான அமைப்பு. சொந்தக் கட்டிடத்தில் நூலகம், கலையரங்கம், வரவேற்பரங்கம், சிற்றரங்கம், விருந்தினர் அறைகள் ஆகிய வசதிகள் உண்டு. கீழ்த் தளம் முழுவதும் வங்கிக்கு வாடகைக்கு விடப்பட்டுள்ளது. திரைப்படம் உள்பட எல்லா வகையான நிகழ்ச்சிகளுக்கும் ஏற்ற நவீன வசதிகள் கொண்டது திருவள்ளுவர் கலையரங்கம்.
சுமார் ஒரு கோடி ரூபாய் செலவில் கலையரங்கம் கட்டி முடிக்கப்பட்டு, சங்கம் கடனில் இருந்த காலம் வரை தன்னலம் கருதாத நபர்கள் பொறுப்புகள் வகித்தார்கள். சுமார் 2000 வாக்கில் கடன் முடிவுக்கு வந்தது. உடனே துவங்கின பதவிப்போட்டிகள். ஆண்டுக்கு சுமார் 2 கோடி ரூபாய் வருவாய் வருகிறதே!
சங்கத்தை நிர்வகிப்பதற்கான செயற்குழு, இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை உறுப்பினர்களால் தேர்வு செய்யப்படும். ஒருமுறை தேர்வு செய்யப்பட்டவர்கள், பதவிக்காலம் முடிந்ததும் அடுத்த தேர்தலில் போட்டியிட முடியாது. இரண்டு ஆண்டுகள் இடைவெளிவிட்ட பிறகுதான் மீண்டும் போட்டியிட முடியும் என்பது சங்க விதி. குறிப்பிட்ட சிலரே தொடர்ந்து பதவிகளைப் பிடித்துக்கொண்டிருக்கக் கூடாது, புதியவர்கள் பொறுப்புக்கு வர வேண்டும், புதிய சிந்தனைகளை செயல்படுத்த வேண்டும் என்பதே இதன் நோக்கம்.
ஆனால் நடைமுறையோ முற்றிலும் வேறாக இருக்கிறது. ஒரு தேர்தலில் ஏ என்ற ஓர் அணியில் முக்கியப் பொறுப்புக்கு வருகிற நான்கைந்து பேர், தம் பதவிக் காலம் முடிந்ததும் அடுத்த தேர்தலில் பி என்ற அணியில் நான்கைந்து பேருக்கு ஆதரவளித்து அவர்களை வெற்றி பெறச் செய்து பதவியில் அமர்த்தி விட்டுச் செல்வார்கள். அந்த பி அணியினர், தம் பதவிக்காலம் முழுவதும் ஏ அணியினருக்கு விசுவாசமாக இருப்பார்கள். பிறகு, பி அணியின் பதவிக்காலம் முடியும்போது, நன்றிக் கடனாக அதே ஏ அணியினருக்கு ஆதரவு கொடுத்து பதவியில் அமர்த்துவார்கள். அல்லது, ஒருமுறை பதவிக்காலம் முடிந்ததும் அடுத்த தேர்தலில் போட்டியிட முடியாதபோது, தமது மனைவிமார்களை களத்தில் இறக்கி, பதவியில் அமர்த்துவார்கள். இப்படியே குறிப்பிட்ட சிலரே தொடர்ந்து முக்கியப் பொறுப்புகள் வகித்து தம்மையும் தம் பிள்ளைகளையும் முன்னேற்றிக் கொள்கிறார்களே தவிர, சங்கத்தை, தமிழை, தமிழின் பெருமையை முன்னேற்ற ஏதும் செய்வதில்லை. சங்கம் இன்று வெறும் பொழுதுபோக்கு அமைப்பாக ஆகி விட்டது.

சங்கத்தின் முன் உள்ள மற்றொரு பெரிய சிக்கல் - சிலரின் தவறான, தன்னிச்சையான  நிர்வாகச் செயல்பாடுகளால் இன்று 13 கோடி ரூபாய் தண்டத் தொகை செலுத்த வேண்டியிருப்பது. அரசுக்கு நான்கு கோடி ரூபாய் தண்டத் தொகை செலுத்த வேண்டியிருக்கிறது, அதைக் குறைக்க முயற்சி செய்கிறோம் என்று சொல்லிக் கொண்டே இருந்தவர்கள் என்ன செய்தார்களோ ஏது செய்தார்களோ, இப்போது அது 13 கோடி ரூபாய் ஆக உயர்ந்து விட்டது. இதற்கு யார் காரணம்? யார் பொறுப்பு? 13 கோடி ரூபாய் தண்டத் தொகை செலுத்துவது குறித்து சிறிதும் கவலையே இல்லாமல், பதிலளிக்கும் பொறுப்பும் இல்லாமல், லட்சக்கணக்கில் வாரி இறைத்துக் கொண்டிருக்கிறார்கள். இவர்கள் அவர்களையும், அவர்கள் இவர்களையும் மாறி மாறி பதவியில் அமர்த்தி, சங்கத்துக்குப் பெரும் பாதிப்பு ஏற்பட்டுக் கொண்டிருக்கும் நிலையை மாற்ற வேண்டாமா?
புதிய சிந்தனைகளுடன் புதிய நபர்கள் பொறுப்புக்கு வர முடியாதபோது, சங்கத்தின் செயல்பாடுகள் செக்குமாடு சுற்றுவதுபோல ஆகிவிடுகிறது. மாதம் ஒரு திரைப்படம், இரண்டு இசைக் கச்சேரிகள், ஓரிரு பரத நாட்டியங்கள், ஒரு மெல்லிசை நிகழ்ச்சி, ஒரு சாலமன் பாப்பையா / ஞான சம்பந்தன் குழுவினரின் பட்டிமன்றம் என இவையே நிகழ்ச்சிகளாக நடைபெறுகின்றன. 3 மணி நேரத்துக்கு 30-40 ஆயிரம் ரூபாய் வாடகை வசூலிக்கப்படக்கூடிய திருவள்ளுவர் கலையரங்கில் நடைபெறும் சில நிகழ்ச்சிகளில் பார்வையாளர்கள் 10-15 பேர்கூட இருக்க மாட்டார்கள்! தமக்கு வேண்டப்பட்டவர்களை திருப்தி செய்வதற்காகவே பல நிகழ்ச்சிகளும் நடத்தப்படும். தமிழ் இலக்கியத்துக்காக, ஆய்வுக்காக, படைப்புகளுக்காக, படைப்பாளிகளுக்காக எதுவும் நடப்பதில்லை. மிக அரிதாக நடக்கும் ஓரிரு நிகழ்ச்சிகளின் தகவல்களும் சரியாகக் கொண்டு சேர்க்கப்படுவதில்லை.
இந்த நிலையை மாற்ற வேண்டும் என்று நாங்கள் சிலர் பல்லாண்டுகளாக முயற்சி செய்து வருகிறோம். நிர்வாகம் ஊழலற்றதாக இருக்க வேண்டும். உறுப்பினர்களுக்கு பதிலளிக்கும் பொறுப்புடையதாக இருக்க வேண்டும். தொலைநோக்குக் கொண்ட செயல்திட்டங்கள் வகுக்க வேண்டும். கணக்கு வழக்குகளில் ஒளிவு மறைவு இல்லாததாக செயல்படும் வகையில் விதிகளைத் திருத்த வேண்டும். செயற்குழு எடுக்கும் முடிவுகளை வலைதளத்தில் பதிவேற்ற வேண்டும், வரவு செலவுக் கணக்குகளை மாதம்தோறும் வெளியிட வேண்டும். வலைதளத்தை சீரமைக்க வேண்டும். 
இது போன்ற நோக்கங்களை நிறைவேற்றுவதற்காக நாங்கள் சிலர் முயன்று வருகிறோம். இதற்காக சில நேரங்களில் மேலே சொன்ன நபர்களையேகூட அவர்கள் இந்த நோக்கங்களுக்கு ஒப்புக் கொண்டார்கள் என்பதற்காக கூட்டு சேர்ந்து அவர்களை வெற்றி பெற வைத்திருக்கிறோம். அப்போதும்கூட, நமது நோக்கங்களை நிறைவேற்றுவோம் என்று எழுதி கையொப்பம் இட்டு ஒப்புதல் அளித்ததால் ஆதரவு தெரிவித்தோம். ஆனால் ஒருபோதும் அவர்கள் ஆதரவுடன் எந்தப் பதவியையும் பெற்றதில்லை.
ஆனால், இப்படி யாரை எல்லாம் வெற்றி பெறச் செய்தோமே அவர்கள் எல்லாருமே முதுகில் குத்தினார்கள். அரைத்த மாவை அரைத்தது போல அதே பாதையில் போய், தமது பதவிக் காலத்தை முடித்தார்கள். மீண்டும் தமது கூட்டாளிகளை பதவியில் அமர்த்தி விட்டுச் செல்கிறார்கள்.
உதாரணமாக, கடந்த முறை நாங்கள் ஆதரித்தவர்கள்தான் பெரும்பான்மை பெற்றார்கள். ஆனால் அவர்களில் முக்கியஸ்தர்கள் எந்த நோக்கத்தை முன்வைத்து தேர்தலில் வாக்குறுதி அளித்தார்களோ, அந்த நோக்கத்தை தூக்கி எறிந்து விட்டு எதிர்நிலை எடுத்தார்கள். அது மட்டுமல்ல. தேர்தல் நேரத்தில் எந்த ஜனநாயகத்துக்காக எங்களுடன் சேர்ந்து குரல் கொடுத்தார்களோ, அந்த ஜனநாயகத்தையே குழிதோண்டிப் புதைக்கவும் எங்களை வசைபாடவும் தவறவில்லை. இரண்டு ஆண்டுகள் மட்டுமே பதவியில் இருப்போம் என்று 2016 டிசம்பரில் சொன்னவர்கள் சரியாக மூன்று ஆண்டுகள் கழித்து விட்டார்கள்.
இப்போது மீண்டும் தேர்தல் வருகிறது. வருகிற ஞாயிற்றுக் கிழமை, டிசம்பர் 15ஆம் தேதி சங்கத்துக்கான தேர்தல் நடைபெற உள்ளது.
கடந்த தேர்தலில் யாரை வெற்றி பெறச் செய்தோமோ அவர்கள், ஜனநாயகத்தை குழிதோண்டிப் புதைப்பதில் யார் முனைப்பாக இருந்தார்களோ அவர்களுக்கு ஆதரவளித்து வெற்றி பெறச் செய்ய முனைந்து செயல்பட்டுக்கொண்டிருக்கிறார்கள்.
ஜனநாயகத்தை மீண்டும் நிலைநாட்ட, பதவிப் பித்தர்களிடமிருந்து சங்கத்தை மீட்க, எல்லாரும் ஒன்றாகச் செயல்படுவோம் என்றுதான் நினைத்திருந்தேன். எங்களில் எவரும் பதவியைப் பொருட்டாக நினைக்கக் கூடாது, தனக்கு இந்தப் பதவிதான் தேவை என்று யாரும் நினைக்கக்கூடாது. பொது நோக்கத்துடன் இயங்க வேண்டும் என்று நண்பர்கள் சந்திப்பில் வலியுறுத்தி வந்திருக்கிறேன்.
ஆனால், தேர்தல் குறித்த அறிவிப்பு வந்த பிறகுதான் சில விஷயங்கள் புரிய வந்தது. யாரெல்லாம் தேர்தலில் போட்டியிட வேண்டாம் என்று நினைத்திருந்தேனோ, அவர்கள் ஆறு மாதங்களுக்கு முன்பே தமக்குள் யாருக்கு என்னென்ன பதவி என்று பேசி முடிவு செய்து வைத்திருந்தார்கள். தொடர்ந்து சிலரே பதவிகளில் மாறி மாறி வருவதைத் தவிர்க்க வேண்டும் என்பதே என்னைப்போன்ற சிந்தனை உள்ளவர்களின் கருத்தாக இருந்த்து. ஆனால் எங்கள் நண்பர்களில் சிலர், ஒரு பதவிக்கால இடைவெளி முடிந்ததும் தாமே மீண்டும் பதவிக்கு வர வேண்டும் என்று முடிவு செய்திருந்த விஷயம் மிகவும் தாமதமாகப் புரிந்தது.
பதவி முக்கியம் அல்ல, சங்கத்தின் நலன் மட்டுமே முக்கியம் என்று கருதும் நண்பர்கள் என்று நான் நினைத்திருந்தவர்கள் தேர்தலில் போட்டியிட முடிவு செய்த பிறகு, அவர்களிடமிருந்து விலகுவதைத் தவிர வேறு வழியில்லை. எனவே, எங்கள் நோக்கங்களுடன் ஒத்த சிந்தனை உள்ள நண்பர்களைக் கொண்டு ஓர் அணி அமைத்தோம். தேர்தலில் போட்டியிடக் கூடாது என்று உறுதியாக இருந்த நானும் தவிர்க்க முடியாமல் போட்டியில் இறங்கியிருக்கிறேன். பொதுச் செயலர் பொறுப்புக்குப் போட்டியிடுகிறேன்.
சங்கத்தின் செயற்குழுவுக்குத் தேவை 17 பேர். ஆனால் தாமதமாக முடிவு செய்த காரணத்தால் எங்கள் அணியில் 11 பேர் மட்டுமே போட்டியிடுகிறோம். ஆயினும், 11 பேரும் சாதாரண ஆட்கள் அல்ல. மைய அரசில் பொறுப்பான பதவிகளில் பணிபுரிந்தவர்கள், தனியார் நிறுவனங்களில் பணி புரிபவர்கள். நேர்மைக்குப் பெயர் பெற்றவர்கள். மொழி, கலை, இலக்கியம், நாடகம், சட்டம், சமூகம், நீதி, நிர்வாகம், என பல துறைகளிலும் தகுதி பெற்றவர்கள். குறிப்பாக, இவர்களில் எவரும் அண்மையில் பதவி வகித்தவர்கள் அல்ல. பதவிக்காக அலைபவர்களும் அல்ல, பதவிக்காக சமரசம் செய்து கொள்பவர்களும் அல்ல.
“பற்றுக பதவியை விட்டிடாமல் அப்பற்றை
இறுக்குக இருக்கும் மட்டும்" என்ற புதுக் குறளுக்கு இலக்கணமாக வாழ அனுமதிக்கலாமா?
இப்போது மூன்று அணிகள் போட்டியிடுகின்றன.
ஓர் அணி, இப்போது பொறுப்பில் உள்ளவர்களால் முன்வைக்கப்படுகிற அணி. அடுத்த தேர்தலில் இவர்கள் அவர்களை முன்னிறுத்துவார்கள்.
மற்றொரு அணி, நாங்கள் முன்வைக்கும் கொள்கைகளை ஏற்காமல், பிரிந்து சென்ற அணி. இதில் பெரும்பாலோர் இரண்டு ஆண்டுகளுக்கு முந்தைய செயற்குழுவில் பதவியில் இருந்தவர்கள்தான்.
இந்த இரண்டு அணிகளிலும் உள்ள பெரும்பாலோர் ஏற்கெனவே பலமுறை பதவிகள் வகித்தவர்கள். பதவிக் காலத்தில் ஏதும் செய்யாதவர்கள். கொடுத்த வாக்குறுதிகளையும் மறந்தவர்கள். எனவே, தமக்கு வாக்களியுங்கள் என்று மட்டுமே கேட்க முடியும், ஏன் தமக்கு வாக்களிக்க வேண்டும் என்று சொல்ல முடியாது! இப்போதும் பழைய வாக்குறுதிகளை முன்வைக்கிறார்கள் என்றால், அது பதவியைப் பிடிப்பதற்கான வெற்று வாக்குறுதிகளாகவே இருக்க முடியும்.
 — இன்னொரு அணி எங்களுடைய அணி. சங்கம் மீட்போம் என்பதை எங்கள் கோஷமாக வைத்திருக்கிறோம்.
உறுப்பினர்கள் கருத்துக்கு முன்னுரிமை, வெளிப்படைத் தன்மை, ஊழலுக்கு முற்றுப்புள்ளி, வரவுசெலவுகளில் ஒளிவுமறைவின்மை, முத்தமிழுக்கும் சம மதிப்பளித்தல், கைவிடப்பட்ட பாரதி-வள்ளுவர் விழாக்களை நடத்துதல், தில்லித் தமிழ் மாணவர்களுக்கு ஊக்கமளித்தல் போன்ற வாக்குறுதிகளை வழங்கும் ஒரே அணி சங்கம் மீட்போம் அணி மட்டுமே.
சங்கம் மீட்போம் அணியைச் சேர்ந்த நாங்கள் கீழ்க்கண்ட வாக்குறுதிகளுடன் தேர்தலில் போட்டியிடுகிறோம்.
செயல்பாடுகள் அனைத்திலும் ஒளிவு மறைவு இல்லாமல் வெளிப்படையாக இருப்போம்.

செயற்குழுவின் தீர்மானங்கள், வரவு செலவுக் கணக்குகள் முதலியவற்றை மாதந்தோறும் வலைதளத்தில் பதிவேற்றுவோம்.

உறுப்பினர்களின் கருத்துகளுக்கு மதிப்பளிப்போம்.

உறுப்பினர்களில் பல துறைகளிலும் தகுதி வாய்ந்தவர்களைக் கொண்டு ஆலோசனைக் குழுக்களை அமைத்து, அவர்களின் கருத்தறிந்து செயல்படுவோம்.

பணிவும் துணிவும் பதவியில் இருப்போருக்கு இரு கண்கள் என்பதை உணர்ந்து செயல்படுவோம்.

தில்லித் தமிழ் மாணவர்களுக்காக ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வந்த பாரதி விழாப் போட்டிகள், திருக்குறள் போட்டிகள் மீண்டும் நடத்தப்படும்.

தமிழ்ப் பள்ளிகளில் முதலிடம் பெறும் மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த பரிசுகள் மீண்டும் வழங்கப்படும்.

வலைதளம் சீரமைக்கப்படும். நூலகத்தில் உள்ள நூல்களின் பட்டியல் வலைதளத்தில் பதிவேற்றப்படும்.

புதிய உறுப்பினர்களை சேர்ப்பதே இல்லை. உறுப்பினர் சேர்க்கை முறைப்படுத்தப்பட்டு, புதியவர்கள் உறுப்பினர் ஆக்கப்படுவார்கள்.

தமிழர்கள் திரளாக இருக்கும் பகுதிகளில் கிளை நூலகங்களை உருவாக்க முயற்சிகள் மேற்கொள்வோம்.

பதவிக்காலம் முடிந்த பிறகும் நாற்காலியைப் பிடித்துத் தொங்கிக் கொண்டிருக்க மாட்டோம்.
பாதை தவறிய சங்கத்தை மீட்டு சீரமைக்க உங்கள் கடமையை நிறைவேற்றுங்கள். சங்கம் மீட்போம் அணி வேட்பாளர்களுக்கு வாக்களித்து வெற்றி பெறச் செய்யுங்கள்.
அணியின் வேட்பாளர்கள் பற்றி மேலும் தகவல்களை, செயல் திட்டங்களை, சங்கம் எதிர்கொண்டிருக்கும் சிக்கல்களை, எங்கள் கொள்கைகளை அறிய கீழ்க்கண்ட பதிவுகளையும் வாசிக்கவும்.