Thursday 12 December 2019

சங்கம் மீட்போம் - ஷாஜஹான்


ஷாஜஹான்  ஆர்.


தொழில்
ஒரு பதிப்பக நிறுவனத்தின் பிரதிநிதியாக தில்லிக்கு வந்து, சொந்தமாக கதிர் அச்சு நிறுவனம் ஒன்றை அமைத்து சிறப்பாகச் செயல்பட்டு வருபவர்.

பத்திரிகையாளர்
கல்கி, நக்கீரன் உள்ளிட்ட தமிழ்ப் பத்திரிகைகளுக்கு தில்லியிலிருந்து எழுதி வந்தவர். ஹிண்டு தமிழ் நாளிதழில் இவருடைய கட்டுரைகள் தொடர்ந்து வெளி வருகின்றன. தினமலர் வெளியிடும் ‘பட்டம்’ இதழில் சிறுவர் நூல்கள் பற்றிய அறிமுகத் தொடர் வாரம்தோறும் வெளி வந்து கொண்டிருக்கிறது.

மொழிபெயர்ப்பாளர்
நேஷனல் புக் டிரஸ்ட் வெளியிடும் தமிழ் நூல்கள் செம்மையாக வெளிவரக் காரணமாக இருப்பவர். மேக்மில்லன் பதிப்பகத்திற்காக ஷிவ் கேரா எழுதிய ‘லிவிங் வித் ஆனர்’ என்ற ஆங்கில நூலை ‘வாழ்வாங்கு வாழ்தல்’ எனும் பெயரில் தமிழில் மொழியாக்கம் செய்தவர். 

ரிச்சா பிரகாஷன் என்ற பதிப்பகத்திற்காக திருக்குறள் நூலை திரு சேது ராமலிங்கம் அவர்களின் துணையுடன், குறள், உரை, ஆங்கில ஒலியாக்கம், ஆங்கில மொழியாக்கம் என தமிழரல்லாதவர்களும் பயன்படுத்தும் வகையில் உருவாக்கித் தந்தவர். (இந்நூல் தலைமைத் தேர்தல் ஆணையராக இருந்த திரு கிருஷ்ணமூர்த்தி அவர்களால் சங்கத்தில் வெளியிடப்பட்டது.) 

நேஷனல் புக் டிரஸ்ட், மைய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறையின் பதிப்பகப் பிரிவு, ஸ்டார் பிரசுரம் போன்ற பதிப்பகங்களுக்காக பல நூல்களை மொழியாக்கம் செய்திருக்கிறார். 

தில்லியில் இன்று தமிழ் மொழியாக்கத் துறையில் முன்னிலை வகிப்பவர். மைக்ரோசாப்ட் நிறுவனம், இணையத்தை குழந்தைகள் பாதுகாப்பாகப் பயன்படுத்துவதற்காக, பெற்றோருக்கு பல ஆலோசனைகளை இணையத்தில் ஏற்றியுள்ளது; இந்த ஆலோசனைகளை தமிழில் மொழியாக்கம் செய்தவர்.

நூலாசிரியர்

இந்தியாவில் பெண்களுக்கு வரும் புற்றுநோய்களில் முதலிடத்தைப் பெறுவது மார்பகப் புற்றுநோய். எனவே, மார்பகப் புற்றுநோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக ‘மார்பகப் புற்றுநோய் – அறிந்ததும் அறியாததும்’ என்ற தலைப்பில் ஒரு நூலை எழுதியிருக்கிறார். புற்றுநோய் வல்லுநர்களாக இருக்கும் மருத்துவர்களே இந்நூலைப் பாராட்டி அணிந்துரை எழுதியுள்ளனர். கல்கி, விகடன், ஹிண்டு, குங்குமம் தோழி, தினமலர் உள்ளிட்ட பல பத்திரிகைகள் இந்நூலுக்கு மதிப்புரை வழங்கியுள்ளன.



புகையிலையின் தீமைகளை விளக்கி, புகைப்பழக்கத்தை விட்டொழிக்க வழிகாட்டும் வகையில் ‘அவசியம்தானா ஆறாம் விரல்?’ என்னும் நூலை எழுதியிருக்கிறார். பேஸ்புக்கில் இவர் எழுதிய கட்டுரைகளையும், அதன் தொகுப்பாக வெளிவந்த இந்நூலையும் படித்து ஏராளமானோர் புகைப்பழக்கத்தை விட்டொழித்துள்ளனர். தமது அனுபவங்களையும் பகிர்ந்து கொண்டு மற்றவர்களுக்கும் உதவுகின்றனர்.


இந்த இரண்டு நூல்களும் பல்லாயிரம் பிரதிகள் விற்பனையாகி உள்ளன. அது தவிர, புற்றுநோய் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக இரண்டு நூல்களுமே பல நூறு பிரதிகள் இலவசமாகவும் விநியோகம் செய்யப்படுகின்றன.

‘சக்கரக்காலன் அல்லது பயணக்காதலன்’ என்னும் நூல், அண்மைக்காலத்தில் பயண இலக்கியத்தில் இடம் பெற்றுள்ளது. ‘இது மடத்துக்குளத்து மீனு...ֹ என்னும் நூல், இவரது நினைவலைகளைப் பதிவு செய்கிறது. தில்லித் தமிழ்ச் சங்கத்தின் ஆன்றோர்கள் ஆற்றிய சேவைகளும், அனுபவங்களும்கூட இந்த நூலில் இடம்பெற்றுள்ளன.

சமூகநலப் பணிகள்
2015 டிசம்பரில் சென்னை-கடலூர் கரையோரப் பகுதிகளில் ஏற்பட்ட வெள்ளத்தின்போது பேஸ்புக் நண்பர்கள் மூலமாக நிவாரணப் பணிகளை மேற்கொண்டார். தானும் தமிழகத்துக்குச் சென்று நேரடியாக நிவாரணப் பணிகளில் பங்கேற்றார். அந்த வெள்ளத்தின்போது மட்டும் சுமார் பத்து லட்சம் ரூபாய் ரொக்கமாகவும் பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருள்களையும் திரட்டி விநியோகித்தார். வெள்ளத்தின்போது தொண்டாற்றியவர்களில் பத்துப் பேரை தேர்வு செய்து ‘சென்னையை மீட்கும் ரியல்ஹீரோக்கள்’ என ஆனந்த விகடன் பாராட்டியது. அந்த பத்து பேரில் இவரும் ஒருவர்.

சென்னை வெள்ளத்தின்போது கிடைத்த அனுபவம், 2018 கேரள வெள்ளத்தின்போதும் உதவியது. கேரளத்தை முற்றிலும் சீர்குலைத்த வெள்ளத்தின்போது இவரும் இவருடைய நண்பர்களும் மேற்கொண்ட நிவாரணப் பணிகள் கேரள-தமிழக மக்களாலும் பத்திரிகைகளாலும் பாராட்டப்பட்டன. வெள்ள நிவாரணப் பணிகளில் கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயங்கள் குறித்து இவர் எழுதிய ஆலோசனைகள் பத்திரிகைகளில் வெளிவந்தன. கேரள வெள்ளத்தின்போது இவருடைய நண்பர்கள் மட்டும் பத்து லட்சத்துக்கும் அதிகமான நிதி வழங்கினர். இவருடைய நண்பர் குழுவின் மூலம் கணக்கிட முடியாத அளவுக்கு (ஒரு கோடி ரூபாய்க்கும் அதிகமான மதிப்புள்ள) பொருட்களும் விநியோகம் செய்யப்பட்டன.

2018 டிசம்பரில் கஜா புயல் கடலோரத் தென் மாவட்டங்களைப் பாதித்த்து. அப்போதும் நிவாரணப் பணிகளை ஒருங்கிணைக்க முன்நின்றார். இவருடைய ஒருங்கிணைப்புடன் மிகப்பெரிய நண்பர்கள் குழு நிவாரணப் பணியில் இறங்கியது. தஞ்சையில் மையம் அமைத்து, உணவு, தார்பாலின்கள், உடைகள், போர்வைகள், நாப்கின்கள், அத்தியாவசியப் பொருட்கள், ஆயிரக்கணக்கான பள்ளி மாணவர்களுக்கு நோட்டுப் புத்தகங்கள், பள்ளிகளுக்கு மறுகட்டுமான உதவிகள், கல்வி நிதியுதவிகள் என பல்லாயிரம் பேருக்கு ஏராளமான உதவிகளைச் செய்தது. 

No photo description available.

மேற்கண்ட பணிகளுக்கு எல்லாம் அடிப்படையாக இருந்தது 2012-13இல் தில்லியில் குளிரால் வாடும் மக்களுக்கு கம்பளி விநியோகம் செய்யத் துவங்கியதுதான். எய்ம்ஸ், சப்தர்ஜங் மருத்துவமனைகளுக்கு வெளியே நோயாளிகளும் நோயாளிகளுக்காக வெளியூரிலிருந்து வந்தவர்களும் நூற்றுக்கணக்கானோர் பனி பொழியும் வெட்டவெளியில் நடுக்கும் குளிரில் உறங்குவார்கள். இவர்களுக்காக, முதலில் தன் சொந்த முயற்சியில்  சிறிய அளவில் கம்பளி விநியோகம் செய்யத் துவங்கினார். பிறகு இது விரிவடைந்து ஆண்டுதோறும் 50-60 ஆயிரம் ரூபாய் மதிப்புக்கு கம்பளிகளை விநியோகம் செய்கிறார். இதற்கென டிசம்பர் ஜனவரி மாதங்களில் இரவு நேரங்களில் சென்று சாலையோர ஏழைகளுக்கும் மருத்துவமனையில் இருப்பவர்களுக்கும் விநியோகித்து வருகிறார்.


இதுபோன்ற முயற்சிகள் கல்வி நிதியுதவியின் பக்கமும் திசை திருப்பின. கல்விக் கட்டணம் செலுத்த முடியாத மாணவ மாணவிகளுக்கு சிறிய அளவில் உதவி செய்யத் துவங்கினார். 2013இல் துவங்கிய இந்த முயற்சி, பேஸ்புக் நண்பர்களின் உதவியோடு ஆண்டுக்கு சுமார் 15 லட்சம் என இப்போது விரிவடைந்துள்ளது. ஆண்டுதோறும் சுமார் சுமார் 100 மாணவர்கள் இதனால் பயன் பெறுகிறார்கள். இவ்வாறு உதவி பெற்று, கல்வியை முடித்து, பணியில் சேர்ந்து, பிறருக்கும் உதவத் துவங்கியவர்களும் உண்டு. இதுதவிர, அரசுப்பள்ளிகளில் மறுசீரமைப்புக்கான உதவி, அரசு தொடக்கப் பள்ளிகளுக்கான சில அடிப்படைத் தேவைகளுக்கான உதவி ஆகியவற்றையும் வழங்கி வருகிறார். 

சங்கத்திற்கு ஆற்றிய பணிகள்
சங்கத்தில் இவர் காட்டிய ஈடுபாட்டை அங்கீகரிக்கும் வகையில், செயற்குழுவில் இணைப்பு உறுப்பினராக சேர்த்துக் கொள்ளப்பட்டவர். 1994ஆம் ஆண்டு செயற்குழுவில் இணைச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டு சிறப்பாகச் செயல்பட்டவர். அதனை அடுத்த செயற்குழுவில் செயற்குழு உறுப்பினராக இருந்தவர்.

கலையரங்கம் கட்டி முடிக்கப்பட்ட காலத்தில் திரு ராஜாராமன், திரு எம்.என். எஸ். மணியன் ஆகியோருக்கு உறுதுணையாக இருந்தவர். சங்கம் நடத்திய விழாக்கள், நிகழ்ச்சிகள் அனைத்திற்கும் முன்னின்று உழைத்தவர்.

சங்கத்தின் ஆண்டறிக்கைகள் தெளிவாகவும், தூய தமிழிலும் வெளிவருவதற்கு முக்கியக் காரணமாக இருந்தவர். சங்கத்தின் பொறுப்பில் இல்லாதபோதும் நூலகத்துக்கான புத்தகங்களைத் தேர்வு செய்வதில் உதவி செய்து வந்தவர்; பொறுப்பில் இல்லாதபோதும் ஆண்டறிக்கைகளை பிழையின்றி வெளியிட உதவி செய்தவர். சங்கத்தின் ஆண்டறிக்கையில் வரவு - செலவுக் கணக்குகளை தமிழில் முதல் முதலாக அறிமுகப் படுத்தியதில் முதன்மையாக நின்று பணியாற்றியவர்.

1995ஆம் ஆண்டு சங்க அமைப்புவிதிகள் திருத்தப்பட்ட போது, திருத்தங்கள் ஏன் தேவைப்படுகின்றன என்பதற்கான விளக்கங்களை தமிழில் சங்கம் உருவாக்கியது. இதை நிறைவேற்றியவர்கள் திரு சேதுராமலிங்கம் மற்றும் ஷாஜஹான்.
  • சங்கத்தின் பொன் விழாவுக்காக வளர் தமிழ் என்ற நூலை தொகுத்தளித்தவர். இந்நூலை திரு அப்துல் கலாம் அவர்கள் வெளியிட்டார், திரு விட்டல் மதிப்புரை ஆற்றினார்).
  • சங்கத்தின் பொன் விழாவுக்காக பொன் விழா மலரை தனியொருவராக நின்று தொகுத்தளித்தவர்.
  • பாரதிதாசனின் பன்முகங்கள் என்ற நூலை திரு தமிழரசு,  திரு சேது ராமலிங்கம் ஆகியோருடன் இணைந்து பதிப்பித்தவர்.
  • சங்கத்திற்காக விடுதலை வேள்வியில் வீரத் தமிழர்கள் என்ற நூலை எழுதித் தந்தவர். 
  • தமிழ் 2010 என்ற தலைப்பில் நடைபெற்ற கருத்தரங்கம், அதனையொட்டி வெளிவந்த ‘இதுவரை இன்று இனி’ என்னும் நூல் ஆகியவற்றிலும் இவருடைய பங்கு குறிப்பிடத் தக்கது.


சங்கம் உள்பட தலைநகரின் பல அமைப்புகள் நடத்திய கவியரங்குகள், கருத்தரங்குகள், பட்டிமன்றங்கள், சொற்பொழிவுகளை பங்கேற்றும் தலைமை வகித்தும் நடத்திக் கொடுத்தவர். அப்துல் கலாம் அவர்கள் தலைமையில் நடைபெற்ற கவியரங்கில் கவிதை பாடியவர். நான்கு நாடகங்களில் நடித்தவர்.

 


No comments:

Post a Comment