Friday 13 December 2019

சங்கம் மீட்போம் - உறுப்பினர் சேர்க்கை

அன்பார்ந்த சங்க உறுப்பினர்களே,

சங்கத்தில் மாற்றம் தேவைப்படுகிறது என்கிறோம். மாற்றம் ஏன் தேவைப்படுகிறது?

எத்தனையோ காரணங்கள் இருந்தாலும், இங்கே ஒரு விஷயத்தை மட்டும் அலசுவோம்.

சங்கத்தின் உறுப்பினர் பட்டியலின்படி இப்போது உறுப்பினர்களாக இருப்பவர்கள் சுமார் 1750 பேர்.

இவர்களில் 50க்கும் அதிகமானோர் மறைந்து விட்டார்கள். மீதம் இருப்போர் 1700 பேர்.

முகவரியோ தொலைபேசியோ இல்லாதவர்கள் 250 பேர். மீதம் 1450 பேர்.

தெளிவில்லாத முகவரியுடன், தில்லிக்கு வெளியே சென்று விட்டவர்கள் 150 பேர். மீதம் 1300

தெளிவாக முகவரி இருந்தும், தில்லிக்கு வெளியே குடிபெயர்ந்து விட்டவர்கள் சுமார் 210 பேர் – மீதம் 1090

முகவரியில் தில்லி என்று காட்டினாலும், ஆர்.கே. புரம், துவாரகா போன்ற பகுதிகளில் வசித்து, பணி ஓய்வு பெற்றுச் சென்று விட்டவர்கள், தமிழகத்துக்குக் குடி பெயர்ந்து விட்டவர்கள், இடிக்கப்பட்ட சரோஜினி நகர், நவ்ரோஜி நகரில் வசித்தவர்கள் என, பதிவான முகவரிகளில் இல்லாதவர்கள் சுமார் 250 பேர்.

ஆக, சங்க உறுப்பினர்களாக தில்லியில் இருப்பவர்கள் சுமார் 850 பேர்தான்.

இந்த 850 பேரில், சுமார் 85 வயதைத் தொட்டுவிட்ட திரு கிருஷ்ணமூர்த்தி முதல், 2006இல் உறுப்பினர்கள் ஆனவர்கள் வரை உள்ளனர். கடைசியாக உறுப்பினர் சேர்க்கை நடைபெற்றது 2006இல். ஆக, சங்கத்தில் உறுப்பினர்களாக இருப்பவர்களில் மிக இளையவர்களாக இருக்கக் கூடியவர்களின் வயது சராசரியாக 40-45. வாக்களிப்பவர்கள், வேட்பாளர்கள் ஆகிய இரு பிரிவினரும் இந்த 850 பேருக்குள்ளிருந்துதான் வர வேண்டும். (இப்போதைய வேட்பாளர்களையும் பார்த்தால், சராசரி வயது 55-65.) கடந்த பதினைந்து ஆண்டுகால சங்க வரலாற்றில் பார்த்தால், சுமார் 40 பேருக்குள் சிலர் மட்டுமே திரும்பத் திரும்ப பதவிக்கு வந்திருக்கிறார்கள் என்பதைப் பார்க்க முடியும்.

  • இன்று இருப்பது போலவே இந்த 850 பேருக்குள்ளிருந்து மிகச் சிலர் மட்டும் திரும்பத்திரும்ப பதவிகளைப் பிடித்து அரைத்த மாவை அரைத்துவிட்டுப் போக வேண்டுமா? 
  • எதிர்கால சங்கத்துக்கு வாரிசுகள் வேண்டாமா?  
  • உங்கள் பிள்ளைகளும் பேரர்களும் தமிழ்ச் சங்கத்தில் உறுப்பினர்கள் ஆக வேண்டாமா?
  • புதிய திறமைகள் வர வேண்டாமா?
  • புதிய சிந்தனைகள் வர வேண்டாமா?
  • மாறிவரும் தொழில்நுட்பங்களுக்கு ஏற்ப தமிழ்ச் சங்கத்தையும் முன்னெடுத்துச் செல்ல இளைஞர்கள் வேண்டாமா?

இன்னுமொரு விஷயத்தை நாம் ஆழமாக யோசித்துப் பார்க்க வேண்டும் – ஒரு காலத்தில் அரசுப் பணியில் சேர்ந்தவர்கள் நிறைய இருந்தார்கள். அவர்கள் ஒவ்வொருவராக பணி ஓய்வு பெற்று தெற்கே குடிபெயர்கிறார்கள். இன்னும் சில காலத்தில் அவர்கள் யாருமே இங்கே இருக்க மாட்டார்கள். தகவல் தொழில்நுட்பத் துறையில் ஏராளமானவர்கள் இருந்தார்கள். அவர்கள் பெங்களூர், ஹைதராபாத், சென்னை என இடம் பெயர்ந்து விட்டார்கள். அது தவிர, தில்லியிலேயே வசிக்கும் தமிழர்களிலும் மிகச் சிலர் மட்டுமே தம் குழந்தைகளுக்கு தமிழும் பயிற்றுவிக்கிறார்கள். அவரவர் வசிக்கும் பகுதியும், கல்வித்தேவையுமே அதன் காரணம். எனவே, தமிழ் படிக்கத் தெரிந்த, தமிழில் ஆர்வம் உள்ளவர்களின் எண்ணிக்கையும் குறைந்து கொண்டே போகும். இப்படியே போனால், தமிழ்ச் சங்கத்தில் யார்தான் உறுப்பினராக இருக்க முடியும்?

எனவே, தமிழ்ச் சங்கத்துக்குப் புதிய உறுப்பினர்களை சேர்ப்பதும், தில்லிவாழ் தமிழர்களிடையே தமிழைப் பரப்புவதும் அவசியமாகிறது.

இதுவரை நிர்வாகப் பொறுப்பில் இருந்தவர்கள் எவரும் இதையெல்லாம் சிந்திக்கவே இல்லை. இப்போது போட்டியிடும் இரண்டு அணியினரிடமும் இதுகுறித்த சிந்தனை ஏதும் இல்லை. இருக்கவும் வாய்ப்பில்லை. ஏனென்றால், இந்த இரண்டு அணிகளில் இருப்பவர்களில் பெரும்பாலோர் சங்கத்தில் தொடர்ந்து பதவிகளில் இருந்து வருகிறவர்கள்தான். இந்த நிலைமையை மாற்ற எந்த முயற்சியும் செய்யாதவர்கள்தான். அவர்களுடைய நோக்கமெல்லாம் தாம் பதவிகளைப் பிடிக்க வேண்டும் என்பதே.

அதனால்தான் நாங்கள் மாற்றங்களை முன்நிறுத்தி போட்டியில் இறங்கியிருக்கிறோம்.

இந்தப் பிரச்சினைக்கு நாங்கள் என்ன செய்ய இருக்கிறோம் ?
  • நிறுத்தப்பட்டு விட்ட உறுப்பினர் சேர்க்கையை மீண்டும் துவக்குவோம். ஆனால், ஓட்டுகளுக்காகவே உறுப்பினர் சேர்க்கும் வேலையை செய்ய மாட்டோம்.
  • சங்கம் என்பது பெருமைக்குரிய அமைப்பு. தலைநகரின் எல்லாப் பகுதிகளிலும் உள்ள தமிழர்களுக்கு உறுப்பினர் ஆக சமவாய்ப்புக் கொடுப்போம்.
  • உறுப்பினர் சேர்க்கை விதிகளை வகுத்து முறைப்படுத்துவோம்.
  • எதிர்காலத்தில் சங்கத்தை நிர்வகிக்க திறமையும் தகுதியும் வாய்ந்த உங்கள் வாரிசுகளை உருவாக்குவோம்.

தெளிவான செயல் திட்டத்துடனும், புதிய சிந்தனைகளுடனும் உங்கள் முன்னே நிற்கும் சங்கம் மீட்போம் அணியினருக்கு வாக்களித்து வெற்றி பெறச் செய்யுங்கள். 


மேலும் அறிய :
சங்கம் மீட்போம் அணியினர்
சங்கம் மீட்போம் அணி ஏன் போட்டியிடுகிறது
மும்முனைப்போட்டி உருவானது ஏன் 
சங்கத்தின் முன் உள்ள சவால்கள்
புதிய உறுப்பினர் சேர்க்கை ஏன் தேவை 
ஷாஜஹான்
குமார்
வாசுதேவன்
டாக்டர் வெங்கடேஸ்வரன்
கோவிந்தராஜன்
செல்வரத்தினம்
கிருஷ்ணமூர்த்தி


No comments:

Post a Comment