Saturday 14 December 2019

சங்கம் மீட்போம்


அன்பார்ந்த தில்லித் தமிழ்ச் சங்க உறுப்பினர்களே,
வணக்கம்.

நாளை நடைபெற இருக்கும் தேர்தலில், சங்கம் மீட்போம் என்னும் அணியில் நான் பொதுச் செயலர் பொறுப்புக்குப் போட்டியிடுகிறேன். என் பெயர் ஷாஜஹான். 1991இல் சங்கத்தில் உறுப்பினராக சேர்ந்தேன். அன்று முதல் சில காலம் பொறுப்பில் இருந்தபோதும், எந்தப் பொறுப்புகளிலும் இல்லாதபோதும் சங்கத்துக்கு என்னால் இயன்ற பணிகளை செய்து வந்திருக்கிறேன் என்பதை உங்களில் பலர் அறிந்திருப்பீர்கள்.
உங்கள் ஒவ்வொருவரையும் சந்தித்து, சங்கம் குறித்த என் பார்வைகளை உங்கள் முன்வைக்க விரும்பினேன். ஆனால் கால அவகாசம் இன்மையால் இயலாமல் போனது.
இன்று சங்கத்தின் முன்னே இருக்கும் சவால்கள் என்ன, உறுப்பினர்கள் சேர்க்கை நிறுத்தப்பட்டு விட்டதால் ஏற்படக்கூடிய சிக்கல்கள் என்ன, எமது அணியின் கொள்கைகள் என்ன, செயல் திட்டம் என்ன ஆகிய விவரங்களை எமது அறிக்கைகளின் மூலம் பார்த்திருப்பீர்கள். அல்லது reform-sangam.blogspot.com என்ற வலைதளத்தில் நீங்கள் விரிவாகப் பார்க்கலாம். எமது அணியினரைப் பற்றிய விவரக் குறிப்புகளையும் அதில் பார்க்கலாம்.
சங்கத்தில் தேர்தல் நடைபெறும்போதெல்லாம் ஒரு விஷயத்தை நீங்கள் கவனித்திருப்பீர்கள். குறிப்பிட்ட சிலரே திரும்பத் திரும்ப பதவிக்கு வந்து கொண்டிருப்பார்கள். சங்க விதிகளின்படி, ஒருமுறை பதவியில் இருந்தவர்கள் அடுத்த தேர்தலில் போட்டியிட முடியாது. அந்த விதியும் இல்லை என்றால், ஆயுளுக்கும் சிலரே நாற்காலிகளைப் பிடித்துக் கொண்டிருப்பார்கள்.
இவ்வாறு சிலர் மட்டுமே திரும்பத் திரும்ப பதவிகளில் வரும்போது, புதியவர்களுக்கு, அவர்களின் புதிய சிந்தனைகளுக்கு, புதிய முயற்சிகளுக்கு வாய்ப்பு இருக்காது. வெறும் பொழுதுபோக்குச் சங்கமாக ஆகி விடும். ஆகிவிட்டது என்றே சொல்ல வேண்டும்.
சொந்தக் கட்டிடமும் நல்ல வருவாயும் உள்ள சங்கம் தமிழின் வளர்ச்சிக்கு, தமிழை பரப்புவதற்கு, படைப்பாளிகளுக்கு, தில்லித் தமிழ் மாணவர்களுக்கு, தமிழாய்ந்த சான்றோர்களுக்கு, கலைஞர்களுக்கு என எவ்வளவோ செய்ய முடியும். ஆனால் இங்கே நடப்பதெல்லாம் முற்றிலும் வேறு. உதாரணமாக, சங்கத்தின் வலைதளத்தின் தரத்தையே நீங்கள் பார்த்துக்கொள்ளலாம். எழுபதாண்டுகள் பழைமையான சங்கத்தின் வலைதளம் என்ன நிலைமையில் இருக்கிறது பார்த்தீர்களா? எந்த உலாவியில் சங்க வலைதளத்தில் நுழைந்தாலும், வைரஸ் இருக்கக்கூடும், சாக்கிரதை என்ற எச்சரிக்கை வருகிறது.
ஆக்கபூர்வமான நிகழ்ச்சிகள் என்பதைக் கண்டு பல காலமாகி விட்டது. பாரதி விழாவும், திருவள்ளுவர் விழாவும் நிறுத்தப்பட்டு விட்டன. தமிழ்ப் பள்ளிகளில் முதலிடம் பெற்றுத் தேர்ச்சி பெறும் மாணவர்களுக்குப் பரிசுகள் தருவதற்கென பத்துலட்சம் ரூபாய் மதிப்புள்ள அறக்கட்டளை உண்டு. ஆனால் பரிசுகள் தரப்படுவது நிறுத்தப்பட்டுவிட்டது. திருப்பனந்தாள் ஆதீனம் போன்ற அறக்கட்டளை சொற்பொழிவுகள் நிறுத்தப்பட்டு விட்டன. நூல் வெளியீடுகள் இல்லை. இலக்கிய விழாக்கள் இல்லை.
அடுத்த முக்கியப் பிரச்சினை நிர்வாகம். மைய அரசுத் துறை ஒன்று, சங்கத்தின் மீது நாலரை கோடி ரூபாய் தண்டத் தொகை விதித்தது. அதில் ஒரு கோடி ரூபாய் செலுத்தி விட்டு, மீதியைக் குறைக்க முயற்சிகள் நடைபெற்று வருவதாக சொல்லப்பட்டது. ஆனால் நடந்தது என்ன? நான்கு கோடியாக இருந்த்து இப்போது 13.5 கோடி தண்டத்தொகையாக உயர்த்தப்பட்டு விட்டது. அந்தப் பிரச்சினையை சரி செய்ய வேண்டும் என்பதற்காகத்தான் திரு ரெங்கநாதன் அவர்களை தலைவர் வேட்பாளராக தேர்வு செய்தோம் என்பதையும் சுட்டிக்காட்ட வேண்டும்.
சரி, தண்டத் தொகை நான்கு கோடியிலிருந்து மூன்று மடங்கு அதிகமானதற்கு யார் காரணம்? யார் பொறுப்பு? இந்தக் கேள்விகளுக்கெல்லாம் சரியான பதிலே கிடைக்காது. ஏன்?
ஏனென்றால்,
சங்க நிர்வாகத்தில் வெளிப்படைத் தன்மை இல்லை.
ஜனநாயக மாண்புகள் இல்லை.
உறுப்பினர்களின் கருத்துக்கு மதிப்பு இல்லை
பதிலளிக்கும் பொறுப்புடைமை இல்லை.
நிதி நிர்வாகத்தில் விதிகள் போதவில்லை, இருக்கிற விதிகளும் பின்பற்றப்படுவதில்லை.
எனவேதான், சங்கத்தின் நிர்வாகம், நிதி நிர்வாகம் ஆகியவற்றை முறைப்படுத்துவதற்காக சில துணைவிதிகள் உருவாக்க வேண்டும் என்று பல ஆண்டுகளாக நாங்கள் கோரி வருகிறோம். அவற்றுக்கான வரைவுகளை உருவாக்கி அளித்தும் இருக்கிறோம்.
ஆனால் நண்பர்களே,
மிகவும் வருத்தம் தரும் செய்தி என்னவென்றால், கடந்த பத்துப் பன்னிரெண்டு ஆண்டுகளில் சங்கத்தில் பொறுப்புகளில் வந்த எவரும், இந்த துணைவிதிகள் கூடாது என்று தேர்தல் நேரத்தில் சொன்னதே இல்லை. இன்னும் சரியாகச் சொன்னால், துணைவிதிகளை உருவாக்குவோம், ஜனநாயகத்தை நிலைநாட்டுவோம் என்று சொல்லியே எல்லாருமே பதவிகளைப் பிடித்தார்கள். ஆனால் பதவிக்கு வந்ததும் அதை முற்றிலும் மறந்து விடுவது மட்டுமல்ல, அதற்கு எதிரான நிலைபாடுகளே எடுத்தார்கள்.
இதுவே தொடர்கதையாக நடந்து கொண்டிருப்பதைக் கண்டு பொறுக்க முடியாமல்தான், சங்கம் மீட்போம் அணி உருவானது.
சங்கம் மீட்போம் அணியைச் சேர்ந்த நாங்கள் கீழ்க்கண்ட வாக்குறுதிகளுடன் தேர்தலில் போட்டியிடுகிறோம்.
செயல்பாடுகள் அனைத்திலும் ஒளிவு மறைவு இல்லாமல் வெளிப்படையாக இருப்போம்.
செயற்குழுவின் தீர்மானங்கள், வரவு செலவுக் கணக்குகள் முதலியவற்றை மாதந்தோறும் வலைதளத்தில் பதிவேற்றுவோம்.
உறுப்பினர்களின் கருத்துகளுக்கு மதிப்பளிப்போம்.
உறுப்பினர்களில் பல துறைகளிலும் தகுதி வாய்ந்தவர்களைக் கொண்டு ஆலோசனைக் குழுக்களை அமைத்து, அவர்களின் கருத்தறிந்து செயல்படுவோம்.
பணிவும் துணிவும் பதவியில் இருப்போருக்கு இரு கண்கள் என்பதை உணர்ந்து செயல்படுவோம்.
தில்லித் தமிழ் மாணவர்களுக்காக ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வந்த பாரதி விழாப் போட்டிகள், திருக்குறள் போட்டிகள் ஆகியவற்றை மீண்டும் நடத்துவோம்.
தமிழ்ப் பள்ளிகளில் முதலிடம் பெறும் மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த பரிசுகள் மீண்டும் வழங்கப்படும்.
வலைதளம் சீரமைக்கப்படும். நூலகத்தில் உள்ள நூல்களின் பட்டியல் வலைதளத்தில் பதிவேற்றப்படும்.
புதிய உறுப்பினர்களை சேர்ப்பதே இல்லை. உறுப்பினர் சேர்க்கை முறைப்படுத்தப்பட்டு, புதியவர்கள் உறுப்பினர் ஆக்கப்படுவார்கள்.
தமிழர்கள் திரளாக இருக்கும் பகுதிகளில் கிளை நூலகங்களை உருவாக்க முயற்சிகள் மேற்கொள்வோம்.
பதவிக்காலம் முடிந்த பிறகும் நாற்காலியைப் பிடித்துத் தொங்கிக் கொண்டிருக்க மாட்டோம்.
இதே போன்ற வாக்குறுதிகளை மற்றவர்களும் முன்வைக்கலாம். ஆனால் எங்கள் அணிக்கும் மற்றவர்களுக்கும் ஒரு முக்கியமான வித்தியாசம் உண்டு.
எங்கள் அணியினரில் என்னைத் தவிர எவரும் சங்கத்தில் பொறுப்பு வகித்தவர்கள் அல்ல. நானும்கூட இருபது ஆண்டுகளுக்கு முன்புதான் பொறுப்பில் இருந்திருக்கிறேன்.
மற்ற அணிகளைப் பொறுத்தவரையில், அவர்கள் எல்லாருமே இதே வாக்குறுதிகளை முன்வைத்துத்தான் தேர்தலில் வென்றார்கள், பதவிகளை அனுபவித்தார்கள். பதவிகளில் இருந்தபோது இவற்றை நிறைவேற்ற எந்த முயற்சியும் செய்யாமல் காலத்தைக் கழித்தார்கள். இப்போது மீண்டும் அதே வாக்குறுதிகளை முன்வைக்கிறார்கள். ஆமாம், சொன்ன சொல் மாற மாட்டார்கள். இப்போதும் அவர்களுக்கே வாக்களித்தால், அடுத்த முறையும் இதே வாக்குறுதிகளை முன்வைப்பார்கள்.
உங்களுக்கு வாக்குறுதிகள் மட்டும் வேண்டுமா இல்லை அவற்றை செயல்படுத்தவும் வேண்டுமா? நீங்களே முடிவு செய்யுங்கள்.
சங்கம் பெருமைமிகு சங்கமாக மீண்டும் பொலிவு பெற வேண்டுமானால், சங்கம் மீட்போம் அணிக்கு வாக்களித்து வெற்றி பெறச் செய்யுங்கள்.
எங்கள் அணியில் 17 பேர் இல்லை, பத்துப் பேர்தான் இருக்கிறோம். ஆனால் பத்தும் முத்துகள் என்பதை உறுதியாகச் சொல்ல முடியும். மற்ற இரண்டு அணிகளிலும் தகுதி வாய்ந்த சிலர் இருக்கவே செய்கிறார்கள். மீதமிருக்கும் ஏழு இடங்களுக்கு, அவர்களில் யார் கல்வி-கேள்வியில் சிறந்தவர்கள், யார் சங்க நலனில் அக்கறை கொண்டவர்கள், யார் தன்னை முன்னிறுத்திக் கொள்ளாதவர்கள் என்று நீங்கள் கருதுகிறீர்களோ அவர்களுக்கு வாக்களியுங்கள்.
பாதை தவறிய சங்கத்தை மீட்டு சீரமைக்க உங்கள் கடமையை நிறைவேற்றுங்கள்.
அணியின் வேட்பாளர்கள் பற்றிய தகவல்களை, செயல் திட்டங்களை, சங்கம் எதிர்கொண்டிருக்கும் சிக்கல்களை, எங்கள் கொள்கைகளை அறிய தயவு செய்து வலைப்பூவில் பாருங்கள்.
சங்கம் மீட்போம் அணிக்கு வெற்றி தேடித் தாருங்கள்.
நன்றி. வணக்கம்.


No comments:

Post a Comment