Tuesday 10 December 2019

சங்கம் மீட்போம் அணி ஏன் போட்டியிடுகிறது

அன்பார்ந்த சங்க உறுப்பினர்களே,

எழுபதாண்டு பழைமையான தில்லித் தமிழ்ச் சங்கம் தமிழாய்ந்த சான்றோர்களால் நிறுவப்பட்டது. பல துறைகளிலும் சிறந்து விளங்கிய உறுப்பினர்களால் மேலும் மேலும் மெருகேற்றப்பட்டது. பல பெருமைகளைப் பெற்று விளங்கியது. ஆனால் இன்று, எந்தவித தொலைநோக்குத் திட்டமும் இல்லாமல், எந்தப் புதுமையான சிந்தனையும் இல்லாமல், வளர்ச்சியும் இல்லாமல், மந்தகதியில் போய்க் கொண்டிருக்கிறது.

  • புதிய உறுப்பினர் சேர்க்கை இல்லை. 
  • பாரதி விழா இல்லை. 
  • திருவள்ளுவர் விழா இல்லை. 
  • தமிழ்ப் பள்ளி மாணவர்களுக்குப் பரிசுகள் இல்லை. 
  • இலக்கிய விழாக்கள் இல்லை. 
  • நூல் வெளியீடுகள் இல்லை. 
இப்போது நடப்பதெல்லாம் வெறும் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் மட்டுமே.

அது மட்டுமல்ல. கலையரங்கம் கட்டியதற்காக சங்கம் கடனில் இருந்த காலத்தில்கூட நல்ல பல நிகழ்ச்சிகள் நடைபெற்றன. ஆனால் இன்றோ, அரசுக்கு 13 கோடி ரூபாய் தண்டத் தொகை செலுத்த வேண்டிய நிலைமைக்குப் போனது மட்டுமின்றி, 13 கோடி ரூபாய் தண்டத்தொகை செலுத்த வேண்டியது பற்றிய கவலையே இல்லாமல் ஆடம்பர விழாக்கள் நடந்து வருகின்றன. 

எனவேதான், சங்கத்தின் பெருமையை மீட்க, நிர்வாகத்தை சீரமைக்க, தில்லித் தமிழர்களின் எதிர்பார்ப்புகளை நிறைவு செய்ய, சங்கம் மீட்போம் அணியைச் சேர்ந்த நாங்கள் கீழ்க்கண்ட வாக்குறுதிகளுடன் தேர்தலில் போட்டியிடுகிறோம். 
செயல்பாடுகள் அனைத்திலும் ஒளிவு மறைவு இன்றி வெளிப்படையாக இருப்போம்.
செயற்குழுவின் தீர்மானங்கள், வரவு செலவுக் கணக்குகள் முதலியவற்றை மாதந்தோறும் வலைதளத்தில் பதிவேற்றுவோம்.
உறுப்பினர்களின் கருத்துகளுக்கு மதிப்பளிப்போம். 
உறுப்பினர்களில் பல துறைகளிலும் தகுதி வாய்ந்தவர்களைக் கொண்டு ஆலோசனைக் குழுக்களை அமைத்து, அவர்களின் கருத்தறிந்து செயல்படுவோம். 
பணிவும் துணிவும் பதவியில் இருப்போருக்கு இரு கண்கள் என்பதை உணர்ந்து செயல்படுவோம்.
தில்லித் தமிழ் மாணவர்களுக்காக ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வந்த பாரதி விழாப் போட்டிகள், திருக்குறள் போட்டிகள் மீண்டும் நடத்தப்படும்.
தமிழ்ப் பள்ளிகளில் முதலிடம் பெறும் மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த பரிசுகள் மீண்டும் வழங்கப்படும்.
வலைதளம் சீரமைக்கப்படும். நூலகத்தில் உள்ள நூல்களின் பட்டியல் வலைதளத்தில் பதிவேற்றப்படும்.
உறுப்பினர் சேர்க்கையை முறைப்படுத்தி, புதிய உறுப்பினர்கள் சேர்க்கப்படுவார்கள்.
தமிழர்கள் திரளாக இருக்கும் பகுதிகளில் கிளை நூலகங்களை உருவாக்க முயற்சிகள் மேற்கொள்வோம்.
இரண்டாண்டு பொறுப்புக் காலம் முடிந்ததும் உடனே தேர்தல் நடத்துவோம்.

நேர்மை, தூய்மை, எளிமை, புதுமை ஆகியவற்றையே ஆயுதங்களாகக் கொண்டு களத்தில் இறங்குகிறோம். சரியான தலைமையின்றி திசைமாறிப் போய்க் கொண்டிருக்கும் சங்கத்தை சரியான திசையில் செலுத்த விரும்பும் உறுப்பினர்கள் சங்கம் மீட்போம் அணிக்கு ஆதரவளிக்க வேண்டுகிறோம்.


No comments:

Post a Comment