Friday 13 December 2019

மும்முனைப் போட்டி உருவானது ஏன்

அன்புடையீர்,

மும்முனைப் போட்டி உருவானது பற்றி ஒரு விளக்கம் அளிக்கக் கடமைப்பட்டிருக்கிறேன்.

திரு ரெங்கநாதன் பி எஸ் (ஓய்வு) அவர்கள் தில்லித் தமிழர் பலருக்கும் நன்கு அறிமுகமானவர். தமிழை விருப்பப் பாடமாக எடுத்து பி எஸ் தேர்வில் தேர்ச்சி பெற்றவர். தலைநகர் வாழ் தமிழர்களுக்கும் தமிழ் அமைப்புகளுக்கும் பல்வேறு வகைகளில் உதவி புரிந்துள்ளவர். டைகா இளங்கோ அவர்கள் வாயிலாக சுமார் முப்பது ஆண்டுகளுக்கு முன்னர் எனக்கு அறிமுகமானவர்

அன்னாரைத் தமிழ்ச் சங்கத் தலைமை ஏற்குமாறு வேண்டுகோள் விடுக்கலாமா என்ற எண்ணம் அக்டோபர் மத்தியில் எழுந்தது. தோழர் நாக ஜோதி வாயிலாக அவரைச் சந்திக்க அவகாசம் கோரினேன். நவம்பர் முதல் தேதி சந்திப்பில், தமிழ்ச் சங்கத் தலைவர் பதவிக்கு வேட்பாளராக நிற்க  அவர் ஒப்புதல் வழங்கினார்.  நவம்பர் 03 முதல் 10 வரை நான் வெளியூர்ப் பயணங்களிலிருந்தேன். தேர்தல் அறிவிப்பு வெளியானவுடன், திரு ரெங்கனாதன் ஒப்புதல் அளித்த விவரம் தற்போது களத்தில் இருக்கும் இரு அணியினருக்கும், ஒரே சமயத்தில் அறிவிக்கப் பட்டது. திரு ரெங்கநாதனின் தலைமையை ஏற்றுக்கொண்டு, தாமும் அன்னாரையே தலைவர் வேட்பாளராக அறிவித்தார் திரு முகுந்தன்

ஆனால், தோழர்கள் கேவிகே, அறிவழகன், மகேந்திரன், திருமதி சத்யா அசோகன் முதலானோர், திரு ரெங்கநாதன் அவர்களை முகுந்தனின் வேட்பாளாரகவே கருதினர். அவர்கள் முன்னிலையில் 18 நவம்பர் அன்று, திரு ரெங்கனாதன் அவர்களே, ‘சில மாதங்கள் முன்னர் திரு முகுந்தன் கேட்டபோது தான் மறுத்து விட்டது; பின்னர் திரு நாகஜோதி வாயிலாக திரு சேது ராமலிங்கம் தொடர்பு கொண்டது; பின்னர்  ஒப்புதல் அளித்தது, அதன் பின், திரு முகுந்தன் அவர்களும் தமது வேட்பாளராக இருக்குமாறு கேட்டுக் கொண்டது, அதற்கும் தாம் இசைவு அளித்ததுமுதலிய செய்திகளை வெளியிட்டார்.  அதன் பின்னரும் நமது நண்பர்கள், திரு ரெங்கநாதன் அவர்களை பொது வேட்பாளராக ஏற்கச் சம்மதிக்கவில்லை

இயன்ற மட்டும் அவர்களுக்குத் தெளிவு படுத்த முயற்சித்தேன்: “உயர் பதவி வகித்து ஓய்வு பெற்ற ஒருவர், தாமாகச் சிந்தித்துத்தானே செயல்படுவார்; அவரை முன் மொழிந்தவர் சேது ராமலிங்கமா? முகுந்தனா? கேவிகே-யா? என்பதில் என்ன இருக்கிறது? இடைக்காலத்தில் நீங்கள் வேறு எவரையாவது தொடர்பு கொண்டு ஒப்புதல் பெற்றிருந்தால் சொல்லுங்கள், அதை எப்படிச் சரி செய்வது என்று சிந்திக்கலாம். உங்கள் அபிப்பிராயத்தில் திரு ரெங்கனாதனை விடப் பொருத்தமானவர் என்று எவராவது இருந்தால், அதையாவது தெரிவியுங்கள்என்று பலவிதமாகக் கேட்டுப் பார்த்தேன். எனினும் அவர்கள் தமது செயல் திட்டத்தைப் பகிர்ந்து கொள்ளவில்லை.     

வேட்பு மனு திரும்பப் பெறும் கடைசி நாள் கூட திரு சிவபால முருகனிடம் ஆறு நிமிடங்களுக்கு மேல் மன்றாடினேன். “தலைவர் விஷயத்தில் மட்டும் நான் சொல்வதைக் கேளுங்கள். மீதம் பதினெட்டு இடங்களுக்கும் நீங்கள் சொல்வதை நான் கேட்கிறேன். நாம் இணைந்து நின்றால், எஞ்சியுள்ள 18 இடங்களில் நிச்சயம் 15 இடங்களை வென்று விடலாம். பிறகு என்ன கவலை?” என்று கேட்டேன். திரு சிவபால முருகன் என்மீது பெரிதும் அபிமானம் கொண்டவர். உண்மையாகவே முழு முயற்சி எடுத்திருப்பார். ஆனால் தலைவர் பதவிக்கு திரு கேவிகே அவர்களைத் தவிர வேறு எவரையும் ஏற்றுக்கொள்ள அவர்கள் தயாரில்லை என்று தெரிந்து கொண்டேன்.

இந்த மும்முனைப் போட்டியின் விளைவாக வாக்குகள் சிதறுகின்றன என்று கருதும் சிலரின் கரிசனத்தை நான் அறிகிறேன்பகிர்கிறேன். ஆனால், கடந்த தேர்தலில், சிந்தாமல் சிதறாமல் வாக்குகளைச் சேகரித்து அந்த  அணிக்குச் சமர்ப்பித்து, என்னைத் தோற்கடித்தவர்கள், இப்போது, அந்த அணிக்கு எதிரான வாக்குகள் சிதறுகின்றன என்று கவலைப்படுவது எனக்குப் புரியவில்லை. நான் கடந்த சுமார் பத்து ஆண்டுகளாக சில நிர்வாக மற்றும் நிதி நடவடிக்கைச் சீரமைப்புக்காகப் போராடி வருவதை அறிவீர்கள். “சேது ராமலிங்கம் சொல்கிறார் என்பதற்காக அதைச் செயல்படுத்த முடியாதுஎன்று 2016-ல் பேரவைக் கூட்டத்தில் முகுந்தன் முழங்கியதை நீங்கள் அறிந்திருக்கலாம். 18.11.2018 பேரவைக் கூட்டத்தில், “இவர் பேசக்கூடாது, பேசக்கூடாது. இவர் வந்தாலே குழப்பம்தான். பதினெட்டு வருடங்களாகக் குழப்பிக் கொண்டிருக்கிறார்என்று கூக்குரல் இட்டு  என்னைத் தள்ளிவிட்ட முகுந்தனுக்கு இவர்கள்தான் முதல் எதிரி என்பது போலவும், நானும் தோழர் ஷாஜஹானும் ஓட்டுகளைப் பிரிக்கிறோம் என்ற பாணியிலும் பேசுவது வியப்பளிக்கிறது.  

சங்கம் சீர்பட வேண்டுமெனில், சிந்தாமல் சிதறாமல் வாக்குகளை, திரு ஷாஜஹான் அவர்களைச் செயலராக நிறுத்தி இருக்கும் எமது அணிக்குச் சேகரித்து அளித்திட வேண்டுகிறேன்
அன்புடன்,
சேது ராமலிங்கம்





மேலும் அறிய :
சங்கம் மீட்போம் அணியினர்
சங்கம் மீட்போம் அணி ஏன் போட்டியிடுகிறது
மும்முனைப்போட்டி உருவானது ஏன் 
சங்கத்தின் முன் உள்ள சவால்கள்
புதிய உறுப்பினர் சேர்க்கை ஏன் தேவை 
ஷாஜஹான்
குமார்
வாசுதேவன்
டாக்டர் வெங்கடேஸ்வரன்
கோவிந்தராஜன்
செல்வரத்தினம்
கிருஷ்ணமூர்த்தி


1 comment:

  1. நல்லது நிகழ வேண்டும். அது நல்லவர் வழியே வேண்டும்.

    ReplyDelete