Tuesday 10 December 2019

சங்கம் மீட்போம் அணியினர்



ரங்கநாதன் – தலைவர்  (எண் 2)

ஐ.பி.எஸ். அதிகாரி (ஓய்வு). தில்லியில் பல்லாண்டுகள் காவல் துறையில் உயர் பதவிகள் வகித்தவர். நேர்மையும் உழைப்பும் இவரது தனிப்பண்புகள். உதவி கேட்டு வந்த தில்லித் தமிழர்களுக்கு தன்னால் இயன்ற உதவிகளைச் செய்தவர். I may not be able to change the system. But we can bring changes in the system. “ஒட்டுமொத்த அமைப்பை என்னால் மாற்ற முடியாமல் போகலாம். ஆனால் அமைப்பில் நல்ல மாற்றங்களை நம்மால் கொண்டு வர முடியும்” என்ற பிரகடனத்துடன் களம் இறங்குகிறார்.

கே.எஸ். குமார் – துணைத்தலைவர் (எண் 4)

சிறந்த நிர்வாகி. பாதுகாப்பு அமைச்சகத்தில் இயக்குநராகப் பணி புரிந்தவர். மைய அரசின் பணியாளர் மற்றும் பயிற்சித் துறையில் பணியாற்றுகிறார்; மைய அரசின் உயர் அதிகாரிகளுக்கு நிர்வாகப் பயிற்சியளித்து வருகிறார். வானொலி மற்றும் தொலைக்காட்சியில் ஏராளமான நிகழ்ச்சிகளை தமிழாக்கம் செய்து குரலும் கொடுத்தவர். தில்லித் தமிழ்ப் பண்பாட்டுக் கழகத்தின் செயலாளர் மற்றும் தலைவராக செயல் பட்டவர். தற்போது அரசு ஊழியர்களுக்கு பயிற்சி அளித்து வருகிறார். நிர்வாக அனுபவமும் தமிழில் புலமையும் கொண்டவர்.

ஆர் ஷாஜஹான் – பொதுச்செயலர் (எண் 8)
பன்முகத் திறமைகள் கொண்டவர். எழுத்தாளர், பேச்சாளர், மொழிபெயர்ப்பாளர், பத்திரிகையாளர், கவிஞர் என பல துறைகளிலும் சாதித்துக் காட்டுபவர். தமிழ்ச் சங்கத்தில் பொறுப்பு வகித்தவர், பல நூல்களை வெளிக் கொணர்வதில் உதவியவர். பதிப்புத் துறையில் இயங்கி வருபவர். மார்பகப் புற்றுநோய், அவசியம்தானா ஆறாம் விரல்,  சக்கரக்காலன் அல்லது பயணக்காதலன்,  இது மடத்துக்குளத்து மீனு, விடுதலை வேள்வியில் வீரத் தமிழர்கள், என பல நூல்களை எழுதியுள்ளார். மார்பகப் புற்றுநோய், அவசியம்தானா ஆறாம் விரல் ஆகிய இரண்டு நூல்களும் பல்லாயிரம் பிரதிகள் விற்பனையாகி, தமிழில் ஏராளமான பத்திரிகைகளில் மதிப்புரைகள் வெளிவந்துள்ளன.  ஷிவ் கேராவின் Living with Honour, பகத் சிங்கின் Why I am an Atheist உள்பட ஏராளமான நூல்களை தமிழாக்கம் செய்திருக்கிறார். மொழி, அரசியல், சமூகம் போன்ற விஷயங்களில் இவர் எழுதிய கட்டுரைகள் தமிழ் இந்து, தினமலர் உள்பட பல பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. ஃபேஸ்புக்கில் தன் நண்பர்கள் மூலமாக 2015 டிசம்பர் வெள்ளம், 2018 கேரள வெள்ளம், 2018இல் கஜா புயல் ஆகிய சோதனைகளின்போது, நண்பர்கள் மூலம் 40 லட்சம் ரூபாய்க்கும் மேல் நிதி திரட்டி நிவாரணப் பணிகளை நடத்தினார். ஏழை மாணவர்களின் கல்விக்காக, ஆண்டுதோறும் சுமார் 15 லட்சம் ரூபாய் நிதி திரட்டி உதவி செய்து வருகிறார்.

அழகேசன் – இணைச்செயலர் (எண் 11)
சட்ட நிபுணர். கோவையில் பிறந்து, தில்லியில் நாற்பது ஆண்டுகளாக வசிப்பவர். வேதியியல், சமூகவியல், சட்டம் ஆகிய மூன்று துறைகளிலும் கல்வி பயின்றவர். மைய அரசில் பொறுப்பான பதவி வகித்து அண்மையில் ஓய்வு பெற்றவர். இப்போது வழக்குரைஞர் மற்றும் சட்ட ஆலோசகராகத் திட்டமிட்டுள்ளார். நேர்மையும் எளிமையும் இனிமையும் தமிழார்வமும் இவரது தனிச் சிறப்புகள்.



கே. வாசுதேவன் – பொருளாளர் (எண் 16)
நாடக இயக்குநர். தமிழ்ச் சங்கத்தில் நாடகங்களின் மூலம் உங்களுக்கெல்லாம் நன்கு அறிமுகமானவர். மைய அரசில் உயர் பதவியிலிருந்து ஓய்வு பெற்றவர். இசைக் குடும்பத்தைச் சேர்ந்தவர். தில்லித் தமிழ்க் கல்விக் கழகத்தில் பொறுப்புகள் வகித்தவர். எழுத்தாளர், பேச்சாளர், நாடக ஆசிரியர். தமிழிலும் இந்தியிலும் இதுவரை 13 நாடகங்களை இயக்கி மேடையேற்றியுள்ளார். தமிழ்ச் சங்கத்தில் மட்டும் இதுவரை 10 நாடகங்களை மேடை ஏற்றியவர்.
 செயற்குழு உறுப்பினர்கள்

அமிர்தலிங்கம் (எண் 23)
வான்படை வீரர். இந்திய விமானப் படையில் பணியாற்றி ஓய்வு பெற்ற இவர் பல்லாண்டு காலமாக தமிழ்ச் சங்க உறுப்பினர். அமெரிக்காவில் டென்னிஸ் பயிற்சி பெற்று, இப்போது டென்னிஸ் பயிற்சியாளராக இருந்து, ஏராளமான விளையாட்டு வீர்ர்களை உருவாக்கி வருபவர். தமிழ்ச் சங்கம் நடத்திய நாடகத்தில் நடித்தவர். எளிமையும் அமைதியும் இனிமையும் பண்புகளாய்க் கொண்ட சிறந்த தமிழ் ஆர்வலர்.

கோவிந்தராஜன் (எண் 26)
சமூகப் பணி ஆர்வலர். மாணவப் பருவத்திலிருந்தே விளையாட்டு, கலை மற்றும் சமூகப் பணிகளில் ஆர்வமும் ஈடுபாடும் கொண்டவர். கல்லூரி நாட்களிலேயே சொந்த ஊரில் நேரு யுவ கேந்திரா மூலம் சமுதாயப் பணி ஆற்றியவர். தம் ஊரில் இவர் தோற்றுவித்த நூலகம் இன்று வளர்ந்து பொது நூலகமாக இயங்கி வருகிறது. அச்சகத் துறையில் பணி புரிகிறார். தில்லியில் தமிழ் இளைஞர்களைத் திரட்டி கிரிக்கெட் கிளப் ஒன்றை பல ஆண்டுகளாக நடத்தி வருகிறார். தமிழார்வமும், சமூக அக்கறையும் கொண்டவர்.

கிருஷ்ணமூர்த்தி (எண் 30)
பக்தி இலக்கிய ஆர்வலர். மைய அரசில் உயர் பதவி வகித்தவர். தற்போது பாதுகாப்புத் துறையில் ஆலோசகராக இருக்கிறார். வசிக்கும் பகுதியில் குடியிருப்போர் நலச் சங்கத்தில் முனைப்பாகச் செயல்பட்டு வருபவர். இவர் எழுதிய கவிதைகள் குறிஞ்சி உள்ளிட்ட இதழ்களில் வெளிவந்துள்ளன. பக்தி இலக்கியத்தில் தீவிர ஈடுபாடு உள்ள தமிழ் ஆர்வலர். தமிழ்ச் சங்கத்தில் உறுப்பினர் சேர்க்கையில் உள்ள குறைபாடுகள் குறித்து தொடர்ந்து குரல் கொடுத்து வருபவர்.

ரவிச்சந்திரன் ஜி.பி. (எண் 37)
நிர்வாகி. சமூகப் பணியில் முதுகலைப் பட்டமும், சட்டமும் படித்தவர். மைய அரசின் பல துறைகளில் பணியாற்றியவர்.  இப்போது சட்ட உதவித் துறையில் ஆலோசகராகப் பணியாற்றி வருகிறார். தில்லிக்குப் புதிதாக வரும் தமிழர்களுக்கு வழிகாட்டியாக இருந்து வருபவர். தில்லித் தமிழ்ப் பண்பாட்டுக் கழகத்தில் முனைப்பாகச் செயல்பட்டு பல நிகழ்ச்சிகளையும், பள்ளிகளில் வினா-விடைப் போட்டிகளையும் நடத்தியவர்.  நிர்வாகம், சட்டம்,  இரண்டிலும் அனுபவம் மிக்கவர்.

செல்வரத்தினம் எம். (எண் 39)
விளையாட்டு ஆர்வலர். பள்ளிப் பருவத்திலேயே கலை, இலக்கியம், விளையாட்டு என பல துறைகளிலும் ஈடுபாடு கொண்டவர். நேரு யுவ கேந்திராவுடன் இணைந்து சொந்தமண்ணில் விளையாட்டு மைதானத்தை உருவாக்கி, இளைஞர்களுக்கு விளையாட்டு ஆர்வத்தை ஏற்படுத்தியவர். மக்களோடு இணைந்து களத்தில் இறங்கி செயல்பட்டவர். தில்லியில் கோவிந்தராஜன் உடன் இணைந்து யுசிசி எனும் கிரிக்கெட் அணியை உருவாக்கியுள்ளனர். தில்லியில் தமிழ் விளையாட்டு அணி என்றால் இவர்கள் அணிதான்.

வெங்கடேஸ்வரன் டி.வி. (எண் 44)
அறிவியல் அறிஞர். பல்வேறு தமிழ்த் தொலைக்காட்சிகளில் மங்கல்யான், சந்திரயான், ராக்கெட், செயற்கைக் கோள்கள் தொடர்பான விளக்கங்களை வழங்கும் இவரை எல்லாருமே பார்த்திருப்பீர்கள். அறிவியலில் முனைவர் பட்டம் பெற்றவர். அறிவியல் பலகை என்னும் இதழின் ஆசிரியர். மைய அரசின் அறிவியல் துறையில், ‘விக்யான் ப்ரசார்’ என்னும் அமைப்பில் விஞ்ஞானியாகப் பணியாற்றுகிறார். ஏராளமான அறிவியல் நூல்களை தமிழிலும் ஆங்கிலத்திலும் எழுதியிருக்கிறார். ராஜ்ய சபா தொலைக்காட்சியில் மூன்றாண்டுகளாக ‘யுரேகா’ என்னும் அறிவியல் நேர்காணல் தொடர் வழங்கி வருகிறார். தமிழிலும் ஆங்கிலத்திலும் ஏராளமான பத்திரிகைகளில் இவருடைய கட்டுரைகள் வெளி வருகின்றன. தமிழ்ச் சங்கத்தில் மட்டுமல்ல, பலநூறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று அறிவியல் உரைகளை நிகழ்த்தியுள்ளார்.




கற்றோரைக் கற்றோரே காமுறுவர். 
தில்லித் தமிழ்ச் சங்கம் கலை-இலக்கிய-பண்பாட்டு அமைப்பு. இதனை நிர்வகிக்க பல்வேறு துறைகளிலும் கற்றுத் தேர்ந்தவர்களை, தகுதியுள்ளவர்களை மட்டுமே தேர்வு செய்யுங்கள்.

மேலும் அறிய :

சங்கம் மீட்போம் அணி ஏன் போட்டியிடுகிறது
மும்முனைப்போட்டி உருவானது ஏன் 
சங்கத்தின் முன் உள்ள சவால்கள்
புதிய உறுப்பினர் சேர்க்கை ஏன் தேவை 
ஷாஜஹான்
குமார்
வாசுதேவன்
டாக்டர் வெங்கடேஸ்வரன்
கோவிந்தராஜன்
செல்வரத்தினம்
கிருஷ்ணமூர்த்தி


No comments:

Post a Comment